இலங்கையில் 5 மாவட்டங்களில் பல பகுதிகள் அதிரடியாக முடக்கம்!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில், இன்றைய தினமும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய யாழ்ப்பாணம், மன்னார், பதுளை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

யாழ். மாவட்டத்தின் கரவெட்டி பொலிஸ் பிரிவின் கரனவாய் கிராம உத்தியோகத்தர் பிரிவும், மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலைமன்னார் பியர் மேற்கு, தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹூலங்கபொல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்தகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் நொரகல்லவத்த மேல் பிரிவு, பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் முதலாம் பிரிவு, பனாவென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு, கபுஹென்தொட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெல்மடுல்ல தோட்டத்தின் 5 ஆம் இலக்க பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பொலிஸ் பிரிவின் யட்டதொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அம்பத்தென்னவத்த பிரதான பிரிவு மற்றும் க்ளே பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு மாவட்டத்தின் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் 233 ஆம் இலக்க தோட்டம் மற்றும் மஹவத்த வீதி ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 1,859 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் இது வரையில் 249, 909 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 212 825 பேர் குணமடைந்துள்ளதோடு, 33 695 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று வெள்ளிக்கிழமை 48 கொவிட் மரணங்கள் பதிவாகின.