நவகமுவ ரனால பிரதேசத்தில் களனி கங்கையில் மிதந்து வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கை கால்கள் சங்கிலியில் கட்டப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஹங்வெல்ல எம்புல்கம பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தனது கள்ளக்காதலியுடன் குறித்த வாடகை வீட்டில் சுமார் ஒரு வருட காலம் வாழ்ந்து வந்துள்ள போதும் அவர் ஹல்துமுல்லை பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர் என தெரியவந்துள்ளது.
இன்று (26) கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் கைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததாகவும் தலையில் இரண்டு துப்பாக்கிக் தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.