கௌதாரிமுனையில் சீனர்களின் கடலட்டை பண்ணை; யாழ் நபரின் பெயரில் அனுமதி

கிளிநொச்சி – பூநகரி கௌதாரிமுனை பகுதியில் சீன நாட்டவர்களால் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்ட விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் கடலட்டை வளர்க்கும் ஒருவருடைய பெயரில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் பண்ணை அமைத்துள்ளபோதிலும் பூநகரி பிரதேச செயலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடல் தொழில் திணைக்களத்தினதோ அனுமதி பெறப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருந்த போதிலும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரிடம் இருந்து அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த அனுமதியானது யாழ்ப்பாணத்தவர் மூவரின் பெயரில் வழங்கிய அனுமதியில் உள்ளூர் வாசிகளுடன் இணைந்து சீன நாட்டவரே அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட எல்லைப் பரப்பிற்குள் எவ்வாறு யாழ்.மாவட்டம் அனுமதி வழங்கியது என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அரியாலைக்கும் கௌதாரிமுனைக்கும் இடைப்பட்ட தூரத்தில் உள்ள சிறு தீவை அண்டிய பகுதி யாழ்.மாவட்ட நிர்வாகப் பகுதியாகவே இருக்கும் நிலமையில் அங்கே தொழில் புரிய வழங்கிய அனுமதியை பயன்படுத்தி ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கௌதாரிமுனைப் பகுதிக்குள் தொழில் புரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகோவிட்-19 தடுப்பூசி டெல்டா வைரஸ்சுக்கு எதிராக 33 சதவீதம் மட்டுமே செயற்படும்
Next articleநாட்டில் மீண்டும் எந்தநேரத்திலும் பயணத்தடை அமுலுக்கு வரலாம் – இராணுவ தளபதி எச்சரிக்கை