போலி காசோலைகள் மூலம் 430 இலட்சம் ரூபா மோசடி

இலங்கையின் பிரபல இரும்பு தயாரிப்பு நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து போலி காசோலைகள் மூலம் 430 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முதல் நாள் இலங்கையில் பிரபல இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையின் வங்கி கணக்கில் 430 இலட்சம் ரூபா 7 நபர்களால் வௌ;வேறு இடங்களில் காசோலைகள் மூலம் பெறப்பட்டுள்ளது. தனியார் வங்கி கணக்கொன்றில் இந்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் வெவ்வேறு பிரதேசங்களிலுள்ள கிளை அலுவலங்களில் போலியான காசோலைகள் ஊடாக பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கம்பி தயாரிப்பு நிறுவனத்தில் தொழில்புரியும் ஊழியர்களின் ஆடையை அணிந்து குறித்த சந்தேகநபர்கள் இவ்வாறு பணத்தைப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய வங்கி அதிகாரி, குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய குறித்த சந்தேகநபர் எம்பிலிபிட்டி – நவநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இவரால் குறித்த கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி கிரிபத்கொட பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியில் போலி காசோலையின் ஊடாக 130 இலட்சம் ரூபா பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவின் வணிக மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரும் சி.சி.டி.வி. காணொளி உள்ளிட்டவற்றின் உதவியுடன் இனங்காணப்பட்டுள்ளார்.

அவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மோசடி குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Previous articleதமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் மீது தாக்குதல்
Next articleஒவ்வாமையால் இரு பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!