முல்லைத்தீவில் இடம்பெற்ற பயங்கர வாள்வெட்டு சம்பவம்: சி.சி.ரி.வியில் சிக்கிய புகைப்படம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு வடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு (27) வீடு புகுந்த சுமார் 7 பேர்கொண்ட கும்பல் ஒன்று வீட்டிலிருந்தவர்கள் மீது வாளால் வெட்டியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதுடன் வாகனமொன்றுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் மதிலேறி குதித்து சென்ற இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

பின்னர் சுமார் 60 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய சொகுசு காருக்கு தீவைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் இதன் போது கே டி எச் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது அத்தோடு சொகுசு கார் ஒன்று முற்றாக எரிந்துள்ளது.

இதன்போது வீட்டில் இருந்த ஒருவர் வாள் வெட்டிற்கு இலக்கான நிலையில் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அத்தோடு இன்று (28) காலை குறித்த இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு தடயவியல் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் சோதனைகளை நடத்தியதோடு வீட்டிலிருந்த சி.சி.ரி.வி காணொளி ஆதாரங்களுடன் குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த தாக்குதலை நடத்திய குழுவினரால் வீட்டிலிருந்த சி.சி.ரி.வி கெமராக்கள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நடவடிக்கையினால் சுமார் ஒரு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் குடும்பத்தினர், தாம் வீட்டில் வாழ முடியாத அச்ச சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரியுள்ளனர்.

Previous articleதமிழர் பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்திய பாடசாலை அதிபரின் அசிங்கமான செயல்!
Next articleஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!