டெல்டாவை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை!

டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொரோனா பரவல் நாட்டில் தொடங்கியதிலிருந்து பின்பற்றி வரும் செயற்திட்டத்தையே அரசாங்கம் தொடர்கிறது என்றும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள புதிய செயற்திட்டத்தை முன்னெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல பகுதிகளில் பரவியிருக்கும் இந்திய மாறுபாடு நாட்டில் அதிகமான பகுதிகளுக்கு பரவியுள்ளதா என்பதை தீர்மானிக்க சரியான ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான செயற்திட்டம் எதுவும் இல்லை என்றால், சில வாரங்களுக்கு முன்பு இந்தியா அனுபவித்ததை இலங்கை விரைவில் அனுபவிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் நிலைமையை இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் ஒரு பெரிய அழிவை தவிர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களில் மக்களின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக்கும் விதமாக மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 இன் ஆபத்து சமூகத்திலிருந்து மறைந்துவிட்டதைப் போல மக்கள் நடந்துகொள்கிறார்கள் என்றும் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.