திருமணத்தை நிராகரித்த 16 வயது சிறுமியை கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன்!

தம்புள்ளை- பன்னம்பிட்டிய , மெனிக்தென்ன பிரதேசத்தில், தனது பாட்டியுடன் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் 26 வயது இளைஞர் ஒருவர், தனது திருமண கோரிக்கையை முன்வைத்த நிலையில், அதனைச் அச்சிறுமி நிராகரித்துள்ளார்.

இதனையடுத்து,கூரிய ஆயுதமொன்றால் குறித்த இளைஞர் சிறுமியை பாரதூரமாக வெட்டியதால், படுங்காயமடைந்த சிறுமி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் வீட்டுக்குள் சென்று, இவ்வாறு கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில், கடும் காயங்களுக்கு உள்ளான சிறுமிக்கு 10 மணித்தியாலங்கள் சத்திரசிகிச்சை செய்யப்பட்டதென்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

மாத்தளை- மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், பதுளை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரைக் கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த சிறுமியின் கிராமத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்காக சிறுமி சென்ற போதே, சந்தேகநபர் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதற்கான யோசனையை தெரிவித்துள்ளார். எனினும் அச்சிறுமி அந்த யோசனையை நிராகரித்தமையே இச்சம்பவத்துக்கான காரணம் என சிறுமியின் பாட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Previous articleகனடாவில் கடும் வெப்பம் காரனமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்வு!
Next articleஇன்றைய இராசிபலன்கள் – (03.07.2021)