வரும்காலத்தில் நாடு பஞ்சத்தை எதிர்நோக்க நேரிடும் – எச்சரிக்கும் சஜித்

அரசாங்கம் உரம் தொடர்பில் எடுத்துள்ள முடிவு காரணமாக நாடு எதிர்காலத்தில் பஞ்சத்தை எதிர்நோக்க கூடுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ´´எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதார நிவாரணம் வழங்கும் பொருட்டு 2,365,000 ரூபாய் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

“உர நெருக்கடியினுள் என்ன நடக்கிறது? விவசாயிக்கு பயிர் நிலங்களுக்கு உரம் கிடைக்காத போது, ​​விவசாயியின் உற்பத்தி குறைகிறது. விவசாய உற்பத்தி குறையும் போது, ​​நம் நாட்டில் உணவுப் பாதுகாப்பு மோசமடைகிறது. அது போன்ற ஒன்று நடந்தால் உணவை இறக்குமதி செய்வோம் என அரசாங்கம் கூறுகிறது. உண்மையில், இந்த அரசாங்கத்திற்கு உணவு இறக்குமதி செய்ய பணம் இல்லை. பின்னர் நாட்டில் பஞ்சம் ஏற்படும். உணவுப் பற்றாக்குறையால் மக்கள் வீதியில் மயங்கி விழக் கூடும். படிப்படியாக சேதன இயற்கை உரத்தை நோக்கி செல்ல ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். இந்த நாட்டு மக்களை வீணாக மரணத்தின் விளிம்பிற்கு இழுக்க வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். ” என்றார்.