பிரித்தானியாவில் டெல்டா மாறுபாடு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 46 சதவீதம் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் மிக வேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான டெல்டா மாறுபாடு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்படி தற்போது டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,824ஆக உயர்ந்துள்ளது. இது ஜூன் 30ஆம் திகதி நிலவரப்படி மொத்தம் 161,981ஆக உள்ளது.

இங்கிலாந்தில் 148,538, ஸ்கொட்லாந்து 10,185, வேல்ஸ் 1,749, வடக்கு அயர்லாந்து 1,509 தொற்றுகள் உள்ளன.

இது ஒரு மாதத்திற்குள் டெல்டா தொற்றுகளில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்வைக் குறிக்கிறது. ஜூன் 9ஆம் திகதி மொத்தம் 42,323ஆக இருந்தது.

எனினும், அதிகரிப்பு ஏற்பட்ட போதும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என இங்கிலாந்து பொது சுகாதார (பிஹெச்இ) அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்னும் பரவக்கூடிய டெல்டா பிளஸ் மாறுபாடு விரைவில் நாட்டைத் தாக்கும் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், இதுவரை, டெல்டா பிளஸ் மாறுபாட்டின் 42 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.