இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசிகளே பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வட மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து செலுத்தும் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக, நான் குறிப்பிட்டதாக சில ஊடகங்களில் நேற்று (06) செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன் உண்மை நிலையினை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 2 ஆவது கட்டமாக தடுப்பூசிகள் வழங்குவதற்கு கடந்த சனிக்கிழமை 3 ஆம் திகதி 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் மாவட்ட சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

2 ஆம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களால் இராணுவ மருத்துவக் குழுக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றுவருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் ஜூன் 5 ஆம் திகதி முதல் நாளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 462 பேருக்கும், நேற்று 6 ஆம் திகதி இரண்டாம் நாளில் 9 ஆயிரத்து 453 பேருக்குமாக, முதல் இரண்டு நாள்களில் 18 ஆயிரத்து 915 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அம்மாவட்ட சுகாதார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தடுப்பூசியேற்றும் பணிகள் ஜூன் மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இடம்பெற்றுவருகின்றன.

இதற்கான தடுப்பூசிகள் இராணுவத்தினருக்கே நேரடியாக வழங்கப்பட்டுள்ள என குறிப்பிடப்பட்டுள்ளது.