உயர்கல்விக்கட்டமைப்பு இராணுவ மயமாகும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

​ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படுமானால் உயர்கல்விக்கட்டமைப்பு இராணுவமயமாக்கப்படுவதற்கான அடித்தளம் இடப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இலவசக்கல்வி பாதிப்படைவதுடன் உயர்கல்விக்கட்டமைப்பு இராணுவமயமாக்கப்படும் வாய்ப்புக்களும் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

இத்தகைய பின்னணியில் குறித்த சட்டமூலம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குக் கடந்த 2018 ஆம் ஆண்டில் முந்தைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நாம் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தோம்.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்ற கட்டமைப்பில் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும், இலங்கை மருத்துவப்பேரவை போன்ற கட்டமைப்புக்களின் செயற்பாடுகளில் தாக்கங்கள் ஏற்படும், இராணுவத்தினரை உள்ளடக்கியதாக நிர்வாகசபையொன்றை நிறுவுவதன் ஊடாக உயர்க்கல்விக்கட்டமைப்பு இராணுவமயமாக்கப்படக்கூடும் என்ற காரணிகளை முன்வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டில் மேற்படி சட்டத்தை நாம் எதிர்த்தோம்.

அவ்வாறிருக்கையில் அச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் அதனை நிறைவேற்றுவதற்குத் தற்பாதைய அரசாங்கம் முயற்சிப்பது வருத்தமளிக்கிறது.

அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் எமது கடுமையான எதிர்ப்பை வெளியிடும் அதேவேளை, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleசனிக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் மின்சாரம் தடை!
Next articleமட்டக்களப்பில் இரு தினங்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள்!