சீகா வைரஸ் இலங்கையிலும் பரவும் ஆபத்து!

இந்தியாவில் பரவ ஆரம்பித்துள்ள சீகா வைரஸ் இலங்கையிலும் பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சிறுவர் நோய் பற்றிய விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இன்றைய தினம் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தியாவின் கேரளாவில் இந்த வைரஸ் தற்போது அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் நிலையில், இலங்கையிலும் இந்தத் தொற்று பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த சீகா வைரஸ் புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு பரவக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுளம்புகளால் பரவுகின்ற இந்த சீகா வைரஸினால் இதுவரை 13 பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நேற்றுவரை அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 20ஐ கடந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கேரள மாநிலத்திலிருந்து ஒருவர் ஸ்ரீலங்காவிற்குப் பயணம் செய்தால் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்படும் என்றும் மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.