ரிஷப் பந்துக்கு கொரோனா!

இங்கிலாந்தில் யூரோ கிண்ண போட்டியை நேரில் கண்டுகளித்த இந்திய வீரர் ரிஷப் பந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் டர்ஹமில் பயிற்சியைத் தொடங்குகிறார்கள். ஜூலை 20 முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதியானதாகவும் மற்றொரு வீரருக்குப் பாதிப்பு இருந்தாலும் நலமுடன் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த வீரருக்கு வரும் ஞாயிறன்று மீண்டும் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர், ரிஷப் பந்த் எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து – ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கிண்ண ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் ரிஷப் பந்த். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் விரைவில் மீண்டு வந்து இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என அறியப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பிசிசிஐ இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.

பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒரு வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த எட்டு நாள்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணியினர் தங்கும் விடுதியில் அவர் தங்கவில்லை. எனவே இதர வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயரைச் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.