கனடாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல்!

கனேடிய நகரமொன்றில் ருத்ரதாண்டவம் ஆடிச்சென்ற சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் பல கடந்த சில நாட்களாக இயற்கைச் சீற்றத்தை சந்தித்துவருகின்றன.

ஐரோப்பாவில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகள் பலத்த மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Barrie என்ற நகரை துவம்சம் செய்துள்ளது சூறாவளி.

சூறாவளியால் நான்கு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், 25 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. அந்த நான்கு பேரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவிலான காயம் பட்ட மேலும் நான்கு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சேதமடைந்த 25 கட்டிடங்களில், மூன்று முற்றிலும் நாசமாகிவிட்டன.

ஒரே நிம்மதி, யாரும் உயிரிழக்கவில்லை என்பதுதான், என்கிறார் மேயரான Jeff Lehman. சூறாவளி கடந்து சென்றபின் வீடுகளை விட்டு மெதுவாக வெளியே வந்த மக்களை, உடைந்த சுவர்கள், காணாமல் போன கூரைகள், தூக்கியெறியப்பட்ட கார்கள், துண்டிக்கப்பட்ட எரிவாயுக் குழாய்கள் மற்றும் அறுந்து கிடந்த ஒயர்கள்தான் வரவேற்றன.

கூடவே சைரன் ஒலித்தபடி செல்லும் பொலிஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ்களும்… இதற்கிடையில், மக்கள் தாங்களாக முன்வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் தண்ணீரும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கி வரும் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனதாக தெரிவிக்கிறார் மேயரான Jeff Lehman.