போதைப்பொருளுக்கு அடிமையாகிய சகோதரர்கள் இருவரை ஒரு ஆண்டு மறுவாழ்வுக்கு அனுப்பிய யாழ் நீதிமன்ற நீதிவான்!

போதைப்பொருளுக்கு அடிமையாகிய சகோதரர்கள் இருவரை ஒரு ஆண்டு மறுவாழ்வுக்கு அனுப்பி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் கட்டளையிட்டார்.

பெற்றோர் மன்றில் முன்னிலையாக பிள்ளைகளை சீர்திருத்தத்துக்கு அனுப்ப விண்ணப்பம் செய்தமைக்கு இந்தக் கட்டளையை நீதிமன்றம் இன்று வழங்கியது.

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 19 வயதுடைய சகோதரர்கள் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களின் பெற்றோர் சட்டத்தரணி க.நிசாந்நன் ஊடாக மன்றில் முன்னிலையாகி தமது விண்ணப்பத்தை மன்றுக்கு முன்வைத்தனர்.

“சந்தேக நபர்கள் இருவரும் நீண்டகாலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களை நல்லொழுக்கத்துக்கு மாற்ற பெற்றோர் பெரும் முயற்சிகள் எடுத்தும் பயனற்றுப் போகின.

சகோதரர்களான இருவரையும் சீர்திருத்தி சமூகத்தில் வாழ நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று பெற்றோர் சார்பில் சட்டத்தரணி க.நிசாந்தன் விண்ணப்பம் செய்தார்.

சந்தேக நபர்களின் பெற்றோர் சார்பிலான விண்ணப்பம் மற்றும் சந்தேக நபர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டமையை ஆராய்ந்த நீதிவான் ஏ. பீற்றர் போல், இருவருக்கும் ஒரு வருட சாதாரண சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

சிறைத் தண்டனைக் காலமான ஒரு ஆண்டுக்கு சகோதரர்கள் இருவரில் ஒருவரை கந்தக்காடு மறுவாழ்வு நிலையத்துக்கும் மற்றயவரை பல்லேகல மறுவாழ்வு நிலையத்துக்கும் அனுப்பி மறுவாழ்வு வழங்க கட்டளையிட்டார்.