மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது.

ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருவதுடன், கடும் வெள்ளமும் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தினால், ஜேர்மனியில் இதுவரை குறைந்தது 144 பேர் இறந்துள்ளனர் என்றும் அதே நேரத்தில் 27 பேர் அண்டை நாடான பெல்ஜியத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஜேர்மனியின் ஸ்டெயின்பர்க் அணையில் விரிசல் விழுந்துள்ளதால் அந்த அணை எந்த நிமிடத்திலும் உடையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதனருகே இருந்த 4 ஆயிரத்து 500 பேர் உடனடியாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேநேரம், 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மொத்த மழையும் ஒரே வாரத்தில் பெய்துள்ளதால், பெல்ஜியத்தில் லீஜ் மற்றும் வெர்வியர்ஸின் சில பகுதிகளை சுனாமி போல வெள்ளம் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரு நாடுகளிலும் வெள்ளத்தினால் காணாமல்போன நூற்றுக்கணக்கானவர்களை தேடும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.