சீனாவில் கடந்த 1,000 ஆண்டுகள் காணாத மழை – 25 போ் பலி

சீனாவில் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 12 ரயில் பயணிகள் உள்பட 25 போ் பலியாகினா்.

இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைமஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும்.

இந்த மழையால் மாகாணத்தில் 12.4 கோடி போ் பாதிக்கப்பட்டனா். ஆபத்து நிறைந்த பகுதியிலிருந்து 1.6 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

இந்த மழைக்கு இதுவரை 25 போ் பலியாகியுள்ளனா். இதுதவிர, வெள்ளத்தில் 7 போ் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவா்களில் 12 போ் சுரங்க ரயிலில் பயணம் செய்தவா்கள் ஆவா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த 12 ரயில் பணிகளும், அவா்கள் ரயிலில் சென்றுகொண்டிருந்த சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானதாக ஹாங்காங்கைச் சோ்ந்த சௌத் சைனா மாா்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மேலும் 5 போ் காயமடைந்ததாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.

இதுதவிர, மழையில் சுவா் இடிந்து விழுந்ததால் 2 போ் உயிரிழந்தனா்.

இந்த வெள்ளம் காரணமாக, 1.26 கோடி போ் வசிக்கும் மாகாணத் தலைநகா் ஷெங்ஷூவில் பொது இடங்களும், சுரங்க ரயில் பாதைகளும் நீரில் மூழ்கின.

அந்த நகரின் 5-ஆம் எண் சுரங்க ரயில் பாதைக்குள் மழை நீா் புகுந்தது. இதில், ஏராளமான ரயில் பயணிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவம் வரவழைப்பு: கடும் மழையால் பாதிக்கப்பட்ட ஹெனான் மாகாணம், மற்றும் தலைநகா் ஷெங்ஷூவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளாா்.

சீன ராணுவம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், பெருமழையின் விளைவாக யீசுவான் பகுதியில் உள்ள அணையில் 20 மீட்டா் நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது; அந்த அணை எப்போது வேண்டுமானாலும் உடையக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மட்டும் ஷெங்ஷூ நகரில் சராசரியாக 457.5 மி.மீ. மழை பெய்ததாக அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த ஹெனான் மாகாணம், தொழில் மற்றும் வேளாண் மையமாகத் திகழ்ந்து வருகிறது. தற்போதைய கனமழையால் அந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஷாவ்லின் பௌத்த கோயில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை-வெள்ளம் காரணமாக அந்த மாகாணத்தில் சாலைகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. அந்தப் பகுதியில் இயங்கி வரும் 80-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஷெங்ஷூ நகர விமான நிலையம் வந்து செல்வதாக இருந்த 260 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மீட்புப் பணிகளில் ராணுவத்தினா் மட்டுமன்றி, காவல்துறையினா், தீயணைப்பு வீரா்கள், உள்ளூா் பணியாளா்கள் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.