குளப்பிட்டி சந்தி புடவைக்கடைக்கு தீ வைப்பு – பெண் மீது வாள் வீச்சு

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையிலுள்ள புடவைக்கடை ஒன்று இனம்தெரியாத கும்பலால் தீ மூட்டி எரிக்கப்பட்டு கடை உரிமையாளரின் மனைவி மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு கடையை பூட்டுவதற்கான ஆயத்தங்களை செய்யும் முகமாக கடைக்கு முன்பாக இருந்த பொருட்களை பின்புறத்தில் கொண்டே கடை உரிமையாளரும், அவரது தம்பியும் வைத்துக்கொண்டிருந்த வேளை, உரிமையாளரின் மனைவி கடையின் முன் பக்கம் நின்றுள்ளார்.

Advertisement

இதன்போது அடாவடி கும்பல் ஒன்று கடைக்குள் பெற்றோல் குண்டுகளை வீசி எறிந்து கடைக்கு தீ வைத்தனர். அதனை தடுக்க முற்பட்ட வேளை உரிமையாளரின் மனைவி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தனர்.

அதனால் அவர் அவ்விடத்திலிருந்து தப்பி கடைக்கு பின்புறமாக ஓடியுள்ளார். சத்தம் கேட்டு உரிமையாளரும், அவரது தம்பியும் முன்பக்கம் வந்த போது, வன்முறை கும்பல் தீ மூட்டி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதேவேளை தீயினை அணைக்க முற்பட்ட வேளை கடை உரிமையாளருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.