கல்லுண்டாயில் இருந்து வருகிறீர்களா? வெளியே நில்லுங்கள் – யாழில் அரச அலுவலங்கள் நடக்கும் கேவலம்

கல்லுண்டாயில் இருந்து வருகிறீர்களா? வெளியே நில்லுங்கள். என அதிகாரிகள் தம்மை நடத்துவதாக கூறியிருக்கும் மக்கள் அடிப்படை தேவைகளை பெறுவதற்கு அலைவதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

கல்லுண்டாய் பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் வசிக்கும் கல்லுண்டாய் பகுதி அடிப்படை வசதிகளே அமைத்து தரப்படாத பகுதியாகத்தான் உள்ளது. எமக்கு வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுவும் சரியான ஒழுங்கு முறைப்படி வழங்கப்படுவதில்லை.

இந்த தண்ணீரானது எமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. எமது பகுதிக்குள் உள் நுழையும் வீதிகள் புனரமைத்து தரப்படவில்லை. ஒரு நாள் இரவு, எமது பகுதியில் உள்ள முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்த வேளை

அம்புலன்ஸிற்கு அறிவித்தல் வழங்கினோம். ஆனால் . அம்புலன்ஸ் வரவில்லை. ஆகையால் வாடகை முச்சக்கர வண்டியினை வரவழைத்தோம், ஆனால் முச்சக்கரவண்டி உள்ளே வரமுடியவில்லை. இதனால் நோய்வாப்பட்டவரை தூக்கிச் சென்றுதான்

முச்சக்கரவண்டியில் ஏற்றினோம்.பிரதேச செயலகத்தில் எமது பிரச்சினைகளை சொல்வதற்கு வந்தால், கல்லுண்டாய் பகுதியா எனக் கேட்டுவிட்டு எமது கருத்துக்களை ஏற்க மறுக்கின்றனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் எம்மை நாய்கள் போலதான் பார்க்கின்றது.

இன்றும் கைக்குழந்தையுடன் வந்து கொழுத்தும் வெயிலின் மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும் எந்த அதிகாரிகளும் வெளியில் வந்து பார்க்கவுமல்லை, எமது நிலையை கேட்கவுமில்லை. பிரதேச செயலர் வேலையாக வெளியில் சென்றிருக்கின்றார்

என்றும் ஆகையால் தான் எங்களை சந்திக்க முடியாது என உதவி பிரதேச செயலர் தெரிவித்தார். பிரதேச செயலரிடம் எமது நிலையை எடுத்துக்கூறி எமக்கு ஒரு பதில் கூறாமல் இப்படி பொறுப்பற்ற விதத்தில் செயற்பாட்டுள்ளார்.

போராட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்று கையளித்யுள்ளோம். அதற்கும் தீர்வு கிட்டவில்லை என்றால் நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம் எனத் தெரிவித்தனர்.