நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி 5 ஆவது நாளாக தொடர்கிறது!

டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி, 5 ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை- லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே குறித்த சம்பவத்தில் காணாமல் போயுள்ளார்.

அதாவது கடந்த 18.07.2021 பிற்பகல், நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே, இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளதாக திம்புளை– பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி ஒருவரே, இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அன்றைய நாள் முதல் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் ஆகியோர் இணைந்து, காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று சுமார் 200 பேர் அடங்கிய இராணுவ குழு, நீர்வீழ்ச்சியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

எனினும் காணாமல் போன யுவதியின் எந்த தடயமும் இதன்போது கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்றைய தினமும் தேடுதல் நடவடிக்கையினை இராணுவ குழு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.