சிறையிலுள்ள ரிஷாத்தை நாமும் மிதிக்கக்கூடாது!

ரிசாட் பதியுதீன் சிறையில் இருக்கின்றபொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம், அமைச்சரின் இல்லத்தில் பணிக்க அமர்த்தப்பட்ட சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டறிக்கை ஒன்றையும் விடவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பு சார்ந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திலே பேசியிருந்தார். நேற்றைய தினம் பேச்சாளர் சுமந்திரன் அறிக்கை விட்டிருந்தார். நானும் எழுத்துமூலமான அறிக்கை வெளியிட்டிருந்தேன். இதைவிட பலர் அவ்வாறு செய்திருந்தார்கள்.

பேச்சாளர் அறிக்கைவிட்டால் அது கட்சியினுடையதாகவே அமையும். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருந்தால் அவர் கட்சிக்குரியவர்தான். சிறிதரன் வெளியிடும் கருத்துக்கள் கட்சிக்குரியதாக இருக்கும்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் சிறுமிக்கு நீதிவேண்டி இடம்பெற்ற போராட்டத்தில் நான் கலந்துகொண்டிருந்தேன். அங்கு தெளிவான கருத்தை நான் சொல்லியிருந்தேன்.

இது ரிசாட் பதியுதீனுக்கு எதிரானது அல்ல. அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல. குறிப்பாக ஒரு 15 வயது சிறுமி கொல்லப்பட்டிருக்கின்றார். அல்லது இறந்திருக்கின்றார். அவர் சிறுமியாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது சட்டத்துக்கு முரணானது.

நீதிக்கு முரணானது. அதேவேளை சிறுவர் துஸ்பிரயோகங்களிற்கு உட்பட்டது. ஆகவே இதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் அரசாங்கத்தினால் பழிவாங்கப்பட்டு ரிசாட்பதியுதீன் சிறையில் இருக்கின்றபொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை.

ஜனாசா எரி்கப்பட்டபொழுது முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனையிறவு பகுதியில் முஸ்லிம் சகோதரி ஒருவர் இறக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்தவனே நான்.

ஆகவே சிங்கள, முஸ்லிம் மக்கள் தொடர்பிலே மிகக்கூடிய கரிசனை கொண்டவர்கள். தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்க வேண்டும் என வெளிப்படையாக இதய சுத்தியுடன் செயற்படுகின்றவர்கள் நாங்கள்.

நாங்கள் இது எந்த வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட்பதியுதீனுக்கோ அல்லது அவருடைய கட்சிக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ ஒரு சமூகத்திற்கெதிரானது அல்ல. நீதிவேண்டிய ஒரு பயணம். அந்த நீதியை அவர் நிலைநாட்ட வேண்டும் என்பதைதான் கட்டாயமாக நாங்கள் வலியுறுத்துகின்றோம் என அவர் குறிப்பிட்டார்.