எமக்கு பிசிஆர் எடுக்க வேண்டாம்: முல்லைத்தீவில் கொரோனா அபாயத்தை ஏற்படுத்தியுள்ள தெற்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி தெற்கின் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அத்து மீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடி தொழிலாளர்களால் வடக்கில் பாரிய ஆபத்தினை தோற்றிவிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தளத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் வாடி அமைத்து குறுகிய நிலப்பரப்பில் தொழில்செய்து வருகின்றார்கள்.

யூலை மாத தொடக்கத்தில் இருந்து இதுரை அப்பகுதியில் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முடக்கப்ட்டுள்ள தங்கள் பிரதேசத்தை விடுவிக்க கோரி இன்று (24) போராட்டத்தில் குதித்துள்ள மக்களால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அச்சுறுத்தலாக காணப்படும் நாயாற்று மீனவ குடும்பங்களினால் சுகாதார பிரிவினருக்கு சிரமங்களுக்கு முகம் கொடுத்து பணிசெய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த பதிவும் இல்லாத மக்களால் சுகாதார பிரிவினருக்கு பணிசெய்வதில் பாரிய சவால்கள் உள்ளன. இவர்கள் தொடர்பிலான கண்காணிப்போ அல்லது பதிவு நடவடிக்கையோ எவரிடமும் இல்லை. இன்னிலையில் தான் 22.07.21 அன்று இந்த பகுதியில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் இரண்டு மாகாணங்களை கடந்து புத்தளத்திற்கு சென்றிருந்தமை இந்த மக்களின் அசண்டையீனத்தினை எடுத்துக்காட்டுகின்றது.

பொறுப்பற்ற மக்களாக பாமர மக்களாக எந்த அரச இயந்திரங்களுக்கும் கட்டுப்பாடாத மக்களாக இவர்கள் காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அல்லது இந்த நாட்டிற்கே ஒரு அச்சுறுத்தல் சமூகமாக மாறியுள்ளார்கள்.

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்து வரும் இந்த கரையோர மக்கள் ஒரு கொரோனா கொத்தணியினை தோற்றிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் பொலீசாரோ, அரச நிர்வாகத்தினரோ அக்கறை இல்லாத நிலையில் சுகாதார துறையினர் முழுமையான பங்களிப்புடன் அர்பணிப்புடனும் செயற்பட்டு வரும் வேளையில் புத்தளம் மக்களின் ஒத்துழைப்பில்லாத நிலையில் அவர்கள் சுகாதர பிரிவினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பினையே வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி முடக்கப்பட்ட வேளை ஒரு சிவில் சமூகமாக காணப்பட்ட பகுதி அரச கட்டுப்பாட்டினை சட்டத்தினை நடைமுறைப்படுத்த அதனை ஏற்ற மக்களாக காணப்பட்டார்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் அதிகாரிகள் ஏன் முல்லைத்தீவில் 53 தொற்றாளர்களை கொண்ட முடக்கப்பட்ட கரையோர பகுதி தொடர்பில் உண்மைத்தன்மையினை வெளிப்படுத்துவதிலும் அரச இயந்திரங்களுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் பின்நிற்கின்றன என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்ட சமூக அக்கறையாளர்களிடம் எழுந்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் காவலரண் அமைத்து வீதிசோதனை செய்து மக்களை விடாப்பிடியாக கட்டுப்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வசிக்கும் நாயாற்று பகுதி தொடர்பில் அக்கறை காட்டவில்லையா என்பது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி. அவ்வாறு அக்கறை காட்டியிருந்தால் எவ்வாறு ஒரு கொரோனா தொற்றாளர் மாவட்டம் விட்டு, மாகாணம் விட்டு புத்தளத்திற்கு செல்லமுடியும்? இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏன் பாகுபாடு?
புத்தளத்தில் இருந்து பருவகால மீன்பிடிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதிக்கு அனுமதி கொடுத்தது யார்?. இந்த ஆண்டு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை எனகடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்னிலையில் ஆயிரம் வரையானவர்கள் சுமார் மூன்னூறு படகுகளுடன் இங்கு வந்து தொழில் செய்வதற்கு யார் அனுமதித்தார்கள் அவர்கள் தொடர்பிலான பதிவுகள் யாரிடம் உள்ளது?

இங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்பில் எந்த அரச அதிகாரிகளிடமும் பதிவு இல்லாத நிலையில் இவர்கள் செய்யும் தொழில்தான் என்ன? கடற்தொழில் என்ற போர்வையில் இவர்கள் முல்லைத்தீவிற்கு வருவதன் நோக்கம் என்ன? சட்டவிரோத தொழிலில் ஈடுபடவா (முல்லைத்தீவில் இருந்து இந்தியாவிற்கும் சர்வதேச கடல் எல்லையும் அருகில் இருப்பதன் காரணமா?) என்ற கேள்விகள் முல்லைத்தீவு மாவட்ட மக்களிடத்தில் எழுகின்றது.

இவ்வாறான தொழில் புரிபவர்களை கண்டுகொள்ளாத கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் ஏன் கொரோனா காலகட்டத்தில் இவர்களை இங்கு தொழில்செய்ய அனுமதித்தது.

நாயாற்று பகுதியில் புத்தளத்தினை சேர்ந்தவர்கள் வாழும் பகுதிக்கு அருகில்தான் நாயாறு கடற்படை தளம் அமைந்துள்ளது. அண்மைய பகுதியில் இராணுவ முகாமகள் காணப்பட்டாலும் அந்த மக்கள் சிங்கள மொழினை சரளமாக பேசக்கூடியவர்கள் என்பதன் காரணத்தினால் பாதுகாப்பு தரப்பினருடன் பேசியே தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்களும் இசைவாகவே செயற்பட்டு வருவதனை இங்கு தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் நடந்துகொள்ளும் செயற்பாட்டினை வைத்து காணக்கூடியதாக இருக்கின்றது.

இது ஒரு கொரோனா வலயத்தினை தோற்றுவிக்கும் செயற்பாடாகவே புத்தளம் மக்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

எத்தனை பேர் இவ்வாறு இங்கு வாழ்கின்றார்கள் என்று யாரிடமும் தெரியாத நிலையில், அரசாங்கத்தின பண உதவியினை பெற்றுக்கொள்வதற்காக 198 பேர் பதிவு செய்துள்ளார்கள். நிவாரணம் கொடுக்கவுள்ளதாக பிரதேச செயலகத்தினால் பதிவினை முனனெடுத்தபோது 845 பேர் பதிவினை மேற்கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு பதிவினை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் அன்டியன்,பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரபிரிவினர் பரிந்துரை செய்த போது இல்லை 400 பேர்வரையில்தான் என்று புத்தளம் மீனவர்கள் சொல்கின்றார்கள்.

இவ்வாறு எந்த கணக்கும் பதிவும் அற்ற நிலையில் வாழ்ந்துவரும் புத்தள மீன்பிடியாளர்களால் அரச சுகாதார உத்தியோகத்தர்கள் தங்கள் கடமையினை முழுமையாக செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

முடக்கப்பட்ட பகுதியான இந்த பகுதியில் இருந்து 379 பேர்வரைக்கும் பி.சி.ஆர் செய்யப்பட்டதில் 24.07.21 வரை 53 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள்.

இன்னிலையில் முடக்கப்பட்ட ஒரு பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் செய்வத்காக இன்று (24) சுகாதார பிரிவினர் சென்றபோது முடக்கப்பட்ட பகுதியில் இருந்த புத்தளவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் எத்தனையோ மக்கள் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என வேண்டி நிற்கும் இந்த வேளையில் இந்த மக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காதது கவலையளிக்கின்றது.

கடற்தொழில் அமைச்சு,நீரியல்வளத்திணைக்களத்தின் எந்தஅனுமதியும் இல்லாத நிலையில் இவாகளின் கடற்தொழில் நடவடிக்கையினையும் இவர்களின் தொழில் நடவடிக்கையினையும் யார் கண்காணிப்பார்கள் இவ்வாறானவர்களின் செயற்பாட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பாரிய ஆபத்து எதிர்காலத்தில் உள்ளது அரச பாதுகாப்பு இயந்திரங்கள் இதனை கருத்தில்கொண்டு சட்டம்அனைவருக்கும் சமம் என்பதை இங்கும் நிறைவேற்ற வேண்டும் என்பது முல்லைத்தீவு மக்களின் எதிர்பார்ப்பாகும்.