தமிழே உச்சரிக்கத்தெரியாதவர் வடக்கின் பிரதம செயலாளரா? சுமந்திரன் கண்டனம்

வடக்கு மாகாணத்தின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி உச்சரிக்கத் தெரியாத ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலேயே பிரதம செயலாளர் பதவிக்குத் தகுதியான 12உத்தியோகத்தர்கள் இதற்காகக் காத்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக 1991ஆம்ஆண்டு நிர்வாக சேவைக்குத் தேர்வான7 அதிகாரிகளும், 1995ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்கு தேர்வான 3 அதிகாரிகளும் இதனை எதிர்பார்த்தபோதும் செல்வாக்கை மட்டும் தகுதியாகக்கொண்டு 1995ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்குத் தேர்வானவருக்கு பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டதாகவே காணப்படுகின்றது. பிரதம செயலாளர் பதவி என்பது மக்களோடும் உத்தியோகத்தர்களோடும் நேரடியாகவே தொடர்புபட்ட மாகாண ரீதியிலான ஒரு பணியாகும்.

அந்தப் பதவியின் மூலம் யாருக்குச் சேவையாற்ற வேண்டுமோ அவர்களின் மொழி தெரியாதவரை பதவிக்கு நியமித்து மாகாணசபை என்பது மக்களின் தேவையை பூர்த்திசெய்ய உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அல்ல, அரசின் தேவையை பூர்த்திசெய்ய அமைக்கப்பட்ட கட்டமைப்பு என்பதை இந்த அரசு எடுத்து இயம்பியுள்ளது என்றார்.