கொரோனா தொற்றாளர்களை வீட்டில் தனிமைப்படுத்தினால் சமூகத் தொற்று அதிகரிக்கும்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் வீடுகளிலுள்ளவர்களுக்கும் தொற்றுப் பரவும் அபாயம் அதிகரிக்கும். இதனூடாக சமூகத் தொற்றும் அதிகரிக்கும். எனவே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது இலங்கை போன்ற நாடுகளுக்கு உசிதமான தீர்மானம் அல்ல.” – இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேனா தெரிவித்தார்.

தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம். நாளுக்கு நாள் தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களை எடுத்துக்கொண்டால் தினமும் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்பட்டது.

அதேபோன்று நாட்டில் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் 68 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸ் தொற்று என்பது வீரியமிக்கது என்பதுடன் விரைவில் பரவதுறைக்குப் பாரியப் பாதிப்பை ஏற்படுத்தும்.

டெல்டா வைரஸ் பரவல் அதிகரிக்குமாயின் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை, அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடநெருக்கடி, ஒட்சீசன் பற்றாக்குறை என்பன ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, டெல்டா வைரஸ் பரவலானது பாரிய பிரச்சினையைத் தோற்றுவிக்கும்.

கடந்த இரு தினங்கள் சுமார் 1,700 இற்கும் மேற்பட்டோர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். பி.சி.ஆர். அன்டிஜன் பரிசோதனைகளை எடுத்துக்கொண்டால் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவிலேயே இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பி.சி.ஆர்., அன்டிஜன் பரிசோதனைகள் அதிகரிகப்படுமாயின் தொற்றாளர்கள் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். எதற்காக தினமும் தொற்றாளர்கள் அதிகரிக்கின்றனர்? நான்காவது அலைக்குச் செல்ல நாம் முயற்சிக்கின்றோமா? அதுவே இன்று பிரச்சினை.

கொரோனாத் தொற்று உறுதிபடுத்தியவர்களை வைத்தியசாலைக்கு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லாது வீடுகளில் தனிமைப்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளனர். தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது இலங்கைக்குப் பொருந்துமா?

இலங்கையை எடுத்துக்கொண்டால் அநேகமானவர்கள் விசாலமான வீடுகளில் வாழவில்லை. சிறிய அறைகளிலேயே வசித்து வருகின்றனர். தொற்றாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு பிரத்தியேக அறை ஒன்று இருக்க வேண்டும். பிரத்தியேக மலசலகூடம் இருக்க வேண்டும். இவ்வாறான வசதிகள் பெரும்பாலான மக்களுக்கு இல்லை. எனவே, தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தவது என்பது உசிதமான தீர்மானம் இல்லை.

தொற்றாளர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் வீடுகளிலுள்ளவர்களுக்கும் தொற்றுப் பரவும் அபாயம் அதிகரிக்கும். இதனூடாக சமூகத் தொற்றும் அதிகரிக்கும். இவ்வாறானத் தீர்மானங்களை யார் எடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை” – என்றார்.