நாட்டை முடக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிப்போம் என தாதியர் சங்கம் பகிரங்க எச்சரிக்கை!

அரசாங்கம் நாட்டை முடக்காவிடின் அடுத்த கட்டமாக தாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய இன்றைய தினம் விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் தொற்றால் ஒரு மருத்துவர் உட்பட மூன்று சுகாதாரத் துறை ஊழியர்கள் சமீபத்தில் இறந்துள்ளனர். நாட்டின் சுகாதாரத் துறை நோய்வாய்ப்பட்டிருந்தால், நாடு ஒரு கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

1,000க்கும் மேற்பட்ட தாதியர்கள் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டி தேசிய வைத்தியசாலையில் 25 தாதியர்கள், மாத்தறை மருத்துவமனையில் 8 தாதியர்கள், கரவனெல்லாவில் 12 மற்றும் அநுராதபுரம் மருத்துவமனையில் 11 தாதியர்கள் கடந்த சில நாட்களில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை நோய்வாய்ப்பட்டால், முழு நாடும் ஆபத்தில் இருக்கும். நாட்டில் முடக்கல் அறிவிக்கப்பட்டவுடன், சமூகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அத்துடன் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். ஒரு நாளில் குறைந்தது 100,000 பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாங்கள் பிசிஆர் சோதனைகளை முன்னெடுக்க முன்வருவோம்.

நாட்டில் 38,000 தாதியர்கள் உள்ளனர். சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தயாராக இருப்பதால், அரசாங்கம் நாட்டை முடக்குவதுடன், நிலைமை மோசமடைவதற்கு முன் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.