நல்லூரில் கையில் பாதணியுடன் பொலிசார்!

நல்லூர் ஆலயத்தில் பொலிஸார் பாதணிகளை கையில் எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டோர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் கோயில் நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிசாரின் பஸ் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கொடியேற்ற நிகழ்வினை பார்க்காதவாறு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்திருந்தார்.

மேலும் பொதுமக்கள் தற்போதுள்ள தொற்று நிலைமையினை கருத்திற்கொண்டு ஆலயத்துக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள் வீடுகளில் இருந்தவாறு நேரடியாக ஒளிபரப்பப்படும் ஆலய உற்சவத்தை தரிசியுங்கள், இதன் மூலம் தொற்று நிலைமையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நல்லூர் வெளிவீதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் பாதணிகளை கழற்றிவிட்டு கடமையில் ஈடுபட்டிருந்தனர், தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்குமான முறுகல் நிலை முடிவிற்கு வந்த நிலையில் பொலிஸார் அவர்களது பாதணிகளை கையில் எடுத்து சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.