கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள்

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஒன்றாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

அதாவது கொரோனா வைரஸ் தொற்றின் மரபணுவை வரிசைப்படுத்தல், வைரஸ் தொற்று பரவும் விதம் மற்றும் கணித மாதிரிகள் பற்றி இவர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த ஆய்வு, மரபணு மாற்றங்களைக் கண்டறிய உதவும், மீண்டும் சேர்க்கைகள் மற்றும் வைரஸின் பரவல் மற்றும் அதன் பரவலின் எதிர்காலம் பற்றி கணிக்க கூடியதாக இருக்குமென உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றினை மேற்கோள் காட்டி புதுடெல்லி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மரபணு மாற்றங்கள் மற்றும் வைரஸின் மறு சேர்க்கைகளை அடையாளம் காண ஒரு முழு-மரபணு வரிசைமுறை தேவைப்படுகிறது. அதே நேரத்தில் தொற்றுநோயியல் ஆய்வுகள் அதன் விநியோகத்தை மதிப்பிட உதவும். அதன் எதிர்கால பரவலை மதிப்பிடுவதற்கு கணித மாதிரிகள் தேவைப்படுவதாக கூறப்படுகின்றது.

இதனை மனதில் வைத்தே பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) என்று அழைக்கப்படும் நான்கு நாடுகளின் நாடுகடந்த குழுவின் கீழ் ஒரு கூட்டமைப்பை உருவாக்க, நான்கு நாடுகளின் பல்வேறு பின்னணியிலிருந்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களின் நிபுணத்துவம் உட்பட ஒரு ஆராய்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், இந்தியா மற்றும் பிரேசில் சுற்றுச்சூழல் மாதிரிகளில் SARS-CoV-2 இன் விநியோகத்தை கழிவு நீர் அடிப்படையிலான தொற்றுநோயியல் கண்காணிப்புக்கான மெட்டஜெனோம் பகுப்பாய்வு மூலம் மதிப்பீடு செய்யும்.

அதேநேரத்தில் சீனா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் SARS-CoV-2 இன் உண்மையான நேர P.C.R கண்டறிதலை மேற்கொள்வார்கள். அதாவது சுவாச நோய்களுக்கான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளிடமிருந்து உயிரியல் பொருள் (நாசோபார்னீஜியல் ஸ்வாப்ஸ்) மற்றும் மரபணு மாறுபாடு, ஒப்பீட்டு மரபியல் மற்றும் பைலோஜெனடிக் பகுப்பாய்வு ஆகியவற்றை மேற்கொள்வார்கள்.

மேலும் மரபணு, மெட்டஜெனோமிக் மற்றும் தொற்றுநோயியல் தரவு, பிறழ்வு பகுப்பாய்விற்கான கணித மாதிரிகளை உருவாக்க இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.

அத்துடன் பரவல் நெட்வொர்க் மற்றும் வைரஸின் இயக்கவியலை வெளிப்படுத்த மறுசீரமைப்பு பகுப்பாய்வு மற்றும் இடர் மதிப்பீடு செய்யப்படும்.

அந்தவகையில் வெவ்வேறு குழுக்களால் உருவாக்கப்பட்ட தரவுத்தளம், பல்வேறுப்பட்ட பிராந்தியங்களில் வைரஸின் பரவல் மற்றும் உயிர்வாழ்வை ஒப்பிட்டு, சம்பந்தப்பட்ட ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின் கண்காணிப்பை நிறுவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.