கடும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!

உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிபுக்களின் அடிப்படையில் இலங்கை அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று அறிக்கையிடப்பட்ட கொரோனா தொற்றுக்கள் மற்றும் கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா மரணங்கள் விடயத்தில் உலக அளவில் இலங்கை 14ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய வலயத்தில் இலங்கை 10ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் கொரோனா தொற்று மற்றும் மரண வீதம் என்பவற்றை கணக்கிடும் வேல்ட்ரோமீற்றர் இணையத்தளத்தின் அடிப்படையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரலாற்றில் மிகவும் மோசமான நிலமையில் தற்போது இலங்கை உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் ஊடகங்களில் பிரசாரங்களை செய்து கொண்டிருந்தாலும் உலகில் அதிக கொவிட் மரணங்கள் பதிவாகும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வைத்தியசாலைகளில் கொள்ளளவுகளை மீறி தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமையால் வீடுகளிலேயே சிகிச்சையளிப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால் இன்று எவ்வித மருத்துவ ஆலோசனைகளும் இன்றி மக்கள் வீடுகளிலேயே உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொய்யான தரவுகளை வெளியிட்டு அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்திலுள்ளவர்களே சுகாதார அமைச்சு வெளியிடும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

சரியான நேரத்தில் உரிய தீர்மானங்கள் எடுக்கப்படாமையே தற்போது இந்த நிலைமை ஏற்படக் காரணமாகும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி இடம்பெறுவதே இவை அனைத்திற்கும் பிரதான காரணி ஆகும்.

யுத்தத்தின் போது எடுத்த தீர்மானங்களைப் போன்று இப்போதும் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தில் காணப்படுகின்ற நிதி நெருக்கடியே நாடு முடக்கப்படாமல் இருப்பதற்கான பிரதான காரணியாகும் என குறிப்பிட்டுள்ளார்.