3 வயது குழந்தையை கழுத்தை துடிக்க துடிக்க கொலை செய்த தாய்!

பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜினி. இவர்களது 3 வயது மகள் நிவன்யாஶ்ரீ. இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி மணிகண்டன் வேலைக்கு சென்ற நிலையில், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என கூறி சரோஜினி வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் அது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவமனை சார்பில் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், கோவை எஸ்.பி செல்வநாக ரத்தினம் குழந்தையின் தாயார் சரோஜினியிடம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், கணவர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

அதில், சரோஜினிக்கு, சர்கார்பதி மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த பொம்மன்(23) என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததும், தங்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. தொடர்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்த ஆனைமலை போலீசார், சரோஜனி, கள்ளக்காதலன் பொம்மனை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.