காபூல் மக்களை காப்பாற்றியிருக்கிறோம்: முதல் முறையாக எண்ணிக்கை வெளியிட்ட பிரதமர் ட்ரூடோ

ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போதைய சூழலில் கனடா நிர்வாகத்தால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையை பிரதமர் ட்ரூடோ முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

கனடாவில் தேர்தல் பரப்புரை களைகட்ட தொடங்கியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 20ம் திகதி கனேடிய மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் கியூபெக்கின் Longueuil பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,

ஆப்கான் தொடர்பில் தமது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், தற்போதைய சூழலில் ஆப்கான் மக்கள் 807 பேர்களை அங்கிருந்து வெளியேற்றி புகலிடம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அவர்களுடன் 34 கனேடிய தூதரக அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தாலிபான்கள் வன்முறை மற்றும் விரோதங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோரை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, கனடா தனது நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியாவுடன் இணைந்து முடிந்தவரை ஆப்கான் மக்களுக்கு உதவும் எனவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

500கு மேற்பட்ட ஆப்கான் மக்கள் ஏற்கனவே கனடா வந்துள்ளதாகவும், தமது இலக்கு 20,000 ஆப்கான் மக்களுக்கு கனடாவில் இடமளிக்க வேண்டும் என்பதே என்றும் பிரதமர் ட்ரூடோ சுட்டிக்காட்டியுள்ளார்.