நாட்டின் சுகாதார நிலைமைகளின் உண்மைகளைக் கூற முயற்சித்தமையாலேயே பணிமாற்றம் செய்யப்பட்டது?

நாட்டின் சுகாதார நிலைமைகளின் உண்மைகளைக் கூற முயற்சித்தமையாலேயே சுகாதார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து பறிக்கப்பட்டு ஆசிரியர்களை “நாசமாய் போனவர்கள்” எனத் திட்டிய கெஹலிய ரம்புக்வெலவுக்கு வழங்கப்பட்டதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கோவிட் வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோவிட் வைரஸ் தொற்று பரவுவதற்கு நாட்டில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டப் போராட்டங்களே காரணம் என்று அரசு கூறுகின்றது.

நிதி அமைச்சராக பஸில் ராஜபக்ஷ பதவியேற்கும்போது நாடு முழுவதிலும் சந்திக்கு சந்தி மக்கள் ஒன்றுகூடி அதனைக் கொண்டாடினார்கள்.

அதேபோல் நாவலபிட் டியிலும் ஆளுங்கட்சியினர் பேரணிகளை முன்னெடுத்தனர். அரசின் இத்தகைய செயற்பாடுகளால் நாட்டில் கோவிட் பரவவில்லையா?

எனவே, கோவிட் வைரஸ் பரவலுக்கு போராட்டங்கள் காரணம் எனக் கூற வேண்டாம். கோவிட் வைரஸ் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான சரியான தீர்மானங்களை அரசு எடுக்க வேண்டும்.

நியூசிலாந்தில் ஒரேயொரு கோவிட் வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதற்காக அந்த நாட்டுப் பிரதமர் நாட்டை முடக்கியுள்ளார்.

ஆனால் இலங்கையில் அரசு அமைச்சரவையை மாற்றம் செய்துகொண்டிருக்கின்றது. தனது அமைச்சு மாற்றத்தை பவித்ரா வன்னியாராச்சி அறிந்திருக்கவில்லை எனக் கூறுகின்றார்.

நாட்டின் சுகாதார நிலைமைகளின் உண்மைத்தன்மையை கூற முயற்சித்த பவித்ரா வன்னியாராச்சியை சுகாதார அமைச்சில் இருந்து விலக்கிவிட்டு, ஆசிரியர்களை “நாசமாய் போனவர்கள்” எனத் திட்டிய கெஹலிய ரம்புக்வெலவை சுகாதார அமைச்சராக நியமித்திருக்கின்றார்கள்.

நாமல் ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக ஓர் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ளார்.