தாலிபான்கள் கையால் மரணமடைய காத்திருக்கின்றேன்!

தாலிபான்கள் என்னை கொல்வதற்காக வருவார்கள் அவர்களின் கையால் மரணமடைய காத்திருக்கிறேன் என ஆப்கான் முதல் பெண் மேயர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அத்துடன் பெண் கல்வி மறுக்கப்படும், பெண்கள் புர்கா அணிய வேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் பொது இடத்திற்கு செல்ல அனுமதியில்லை என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 90-களில் தாலிபான்கள் ஆட்சியில் ஷரியத் சட்டம் இயற்றப்பட்டு பெண்கள் முன்னேற்றம் தடைப்பட்டது.

Advertisement

இந்நிலையில்தான் ஆப்கான் முதல்பெண் மேயரான சரிஃபா கஃபாரி (Zarifa Ghafari) தாலிபான்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தான் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

27 வயதான சரிஃபா கஃபாரி (Zarifa Ghafari) 2018-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் முதல் பெண் மற்றும் வயதில் மிக்குறைவான இளம் மேயராக பதவி ஏற்றார். இப்போதே தாலிபான்களால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. அத்துடன் இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அவர் மீது தாலிபான்கள் குற்றம் சுமத்திய நிலையில் சரிஃபாவின் தந்தை கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுகுறித்து பேசியுள்ளா சரிஃபா கஃபாரி (Zarifa Ghafari),

“ தாலிபான்களின் வருகைக்காக நான் இங்கு காத்திருக்கிறேன். எனக்கு அல்லது என் குடும்பத்தினருக்கும் உதவி செய்வதற்கு இங்கு யாரும் இல்லை. நான் எனது கணவருடன் இங்கு அமர்ந்திருக்கிறேன். என்னைப் போன்றவர்களை தேடி வந்து அவர்கள் கொலை செய்வார்கள். என்னால் என் குடும்பத்தைவிட்டு தனியாக செல்ல முடியாது. அப்படி செல்வதாக இருந்தால் எங்கு செல்வது என அவர் வேதனையுடன் கூறினார்.

நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கையுடன் சில வாரங்களுக்கு முன்பு பேசிய சரிஃபா கஃபாரி (Zarifa Ghafari) ,

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை இளைஞர்கள் அறிவார்கள். அவர்களிடம் சமூக ஊடகங்கள் உள்ளன. அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள். முன்னேற்றம் மற்றும் உரிமைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள் என்று நினைக்கிறேன். இந்த நாட்டிற்கு எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

இந்த நிலையில் இப்போது தாலிபான்கள் கையில் மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக சரிஃபா கஃபாரி வேதனையோடு கூறியுள்ளார்.