நாளை நள்ளிரவுடன் இரு வாரங்களுக்கு இலங்கையில் பொது முடக்கமா? ஜனாதிபதி செயலகம் கூறிய விடயம்

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையை முடக்குமாறு சுகாதார தரப்பு, அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நாளை நள்ளிரவு முதல் இரு வாரங்களுக்கு பொது முடக்கம் அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாளை நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவதற்கு இலங்கை ஜனாதிபதியால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் எடுப்பட வேண்டிய அடுத்த கட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவசர சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை குறித்த செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது, இது வரையில் முடக்கம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனவும், இன்று மாலையளவில் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.