சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – முழுமையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட 23 பேர் மரணம்

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றது என , பொது சுகாதார மத்திய அலுவலகம் (BAG) அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில கடந்த 24 மணி நேரத்தில் 3,291 புதிய நோய்த்தொற்றுகள் உட்பட் 95 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது என்றும் , சுகாதார அமைப்பினர் மீண்டும் அதன் வரம்பை எட்டக்கூடும் என்றும் அஞ்சுகின்றனர்.

இந்த நிலையில் பல மருத்துவமனைகள் எச்சரிக்கை ஒலி எழுப்பி வருகின்றன. கோடைகால விடுமுறை முடிவடைந்த பின்னர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று மருத்துவமனைகளின் செய்தித் தொடர்பாளர் “ப்ளிக்” பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

கடுமையான தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்தால் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவிரைவில் எல்லைகளைத் தாண்டக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுவிட்சர்லாந்தில் ஜனவரி இறுதியில் இருந்து இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 122 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ள நிலையில் , இவர்களில் இதுவரை 23 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது.