தண்ணீரில் பாய்ந்த மின்சாரம்… 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்..!

திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவி பலியானார்.

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் மெயின் தெருவில் வசித்து வருபவர் சிட்டிபாபு. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகள் கமலி (வயது 11). இவர், அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் கலைஞர் நகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. சிட்டிபாபுவின் வீட்டின் உள்ளே மழைநீர் வெள்ளம் புகுந்ததால் 2 மகள்களையும் தனது சகோதரி வசிக்கும் கலைஞர் நகர் 10-வது தெருவில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மாலை 6.30 மணியளவில் கமலி உள்பட 3 சிறுமிகள் அருகில் உள்ள கடைக்கு சென்றனர். அப்போது திடீரென மின்சாரம் இயக்கப்பட்டுள்ளது. அப்போது அங்குள்ள மின்சார பெட்டியை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து இருந்தால் மீண்டும் மின்சாரம் வந்ததும் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. அந்த மழைநீரில் மாணவி கமலி கால் வைத்ததும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டாள். உடனே அருகில் இருந்த இளைஞர்கள் மற்ற 2 சிறுமிகளையும் தண்ணீரில் இருந்து உடனடியாக மேலே தூக்கினர்.

Advertisement

இதுபற்றி மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் மாணவியை மீட்டு திருவொற்றியூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் கமலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்டாபிராம் தண்டுரை பகுதியில் மெயின் ரோட்டில் மின் கம்பத்தில் இருந்த மின்சார வயர் பலத்த சூறை காற்று வீசியதால் திடீரென அறுந்து அந்த வழியாக சென்ற பெண் மீது விழுந்தது. நல்ல வேளையாக நேற்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சமபவ இடத்துக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த மின் வயரை சீர் செய்தனர்.- source: dailythanthi