பட்டதாரி ஆசிரியர் பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு கோரிக்கை….!

பட்டதாரி ஆசிரியர் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் பயிலுனர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவை தெரிவிக்கப்பட்டது. மேலும் தெரிவிக்கையில்,

பட்டதாரிகள் பயிலுனர் ஆசிரியர்களாக பாடசாலைகளிலே சுமார் ஒரு வருடத்தைத் தாண்டிய நிலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது ஏமாற்றப்பட்ட நிலையில் இருக்கின்றோம். இருப்பினும் எமது நாட்டின் ஜனாதிபதிக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். கடந்த வருடம் செம்டெம்பர் மாதம் நாடளாவிய ரீதியில் அறுபதாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அது மிகவும் சந்தோசமானதொரு விடயம். அதனடிப்படையில் பட்டதாரிகளுக்கு ஐந்து கட்டப் பயிற்சிகள் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டு அதன் பிற்பாடு பல பட்டதாரிகளின் விருப்பத்திற்கு இணங்க அவர்கள் பாடசாலைகளில் ஆசிரியர் பயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டதற்கமைவாகவே பட்டதாரிகள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் ஆசிரியர் பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.பயற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற இருபதாயிரம் ரூபாய்க்குள் நாங்கள் எவ்வளவு சிரமங்களுக்குள் எமது குடும்ப நிலைமைகளைக் கொண்டு செல்கின்றோம் என்பது குறித்த அமைச்சுகளுக்குத் தெரியவில்லையா? நாடளாவிய ரீதியில் எவ்வளவோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்கள் எவ்வளவோ பிரச்சனைகள் பற்றிக் கதைத்தாலும் எமது பட்டதாரிப் பயிலுனர்களுடைய, குறிப்பாக ஆசிரியர் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பட்டதாரிகளின் நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தன் மாத்திரமே கதைத்துள்ளார். அவருக்கும் எமது நன்றிகள்.

இது தொடர்பில் நாங்கள் உயரதிகாரிகளுடன் கதைத்த போது ஆசிரியர் பிரமான சட்டக் கோவை எனும் தேசிய கொள்கை இருப்பதாகத் தெரிவித்தார்கள். நாங்களும் அதைத்தான் கூறுகின்றோம்.கோவையின் பிரகாரம் பயிலுனர் ஆசிரியர்களாக இருக்கும் பட்டதாரிகளை நேர்முகத் தேர்வு வைத்து ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யுங்கள் என்று.

எமது பட்டதாரிகள் பயிற்சி ஆசிரியர்களாக மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே கடமையாற்றி வருகின்றார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கின்றது. இந்த ஆசிரியர் நியமனம் நிரந்தரமாக்கப்படும் என்பதாகும். அதற்காகக் தான் இத்தனை கஷ்டங்களையும் தாங்கி தங்கள் பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் அதிபர் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு போய்க் கொண்டிருந்தது. இதன்போது பட்டதாரி பயிலுனர் ஆசிரியர்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள்.

இவ்வாறு தங்களின் சந்தர்ப்பத்திற்கு பட்டதாரிகளைப் பயன்படுத்திவிட்டு தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படப் போகின்றது என எமது நியமனத்திற்குப் பொறுப்பான அமைச்சு கூறியிருக்கின்றது.

இதையும் தாண்டி இன்னுமொரு விடயத்தையும் கூறியிருக்கின்றார்கள் 2017, 18, 19களில் பட்டம் முடித்து தற்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருக்கின்றவர்களையும் எதிர்வரும் இரண்டாம் மாதத்தில் வழங்கப்படப்போகின்ற ஆசிரியர் நியமனங்களுக்கு உள்ளீர்ப்பு செய்வதாகவும் கூறியிருக்கின்றார்கள்.

நாங்கள் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆசிரியர் பபயிற்சிகளில் ஈடுபட்டு நிரந்த ஆசிரியர் ஒருவர் எவ்வாறான வேலைகளைச் செய்வாரோ அதே அளவிலான செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த கஷ்டங்களைத் தாண்டி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே மேற்படி விடயங்களைக் கருத்திற் கொண்டு தற்போது பயிற்சி ஆசிரியர்களாக கடமை புரியும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் என்ற அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என நாங்கள் கல்வி அமைச்சரை வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த நாட்டின் நியமனம் வழங்குகின்ற முறையில் பெரும் முரண்பாடு காணப்படுகின்றது. உயர்தரம், சதாரண தரத்துடன் நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது எவ்வித பயிற்சிகளும் வழங்கப்படுவதில்லை.

ஆனால் பட்டதாரிகளின் நியமனங்கள் மாத்திரம ஒரு வருட பயிற்சிக்காகப் பணிக்கப்படுகின்றது. இது ஒரு வகையான முரண்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம்.

பயிற்சி என்பது யாது? ஒரு தொழில் சம்மந்தான அறிவையும், அனுபவத்தையும் முன்கூட்டியே பெறுவது. அந்தவகையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற நியமனத்திற்காக நாங்கள் பாடசாலைகளில் பயிற்சி பெறவேண்டிய தேவை இல்லை. அவ்வாறெனில் இதுவரை காலமும் நாங்கள் பெற்ற பயிற்சி வீணாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே ஜனாதிபதி கவனம் எடுத்து எங்களுக்காக வழங்கப்படுகின்ற நிரந்தர நியமனத்தை ஆசிரியர் நியமனமாகப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுத்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

எங்களை பாடசாலைகளில் பயிற்சிக்காக இணைக்கும் போது வயதெல்லை குறித்துப் பேசப்படவில்லை. ஆனால் தற்போது நிரந்தர நியமனம் என்று வரும்போது மாத்திரம் 35 வயது என்ற வயதெல்லை தொடர்பில் முரண்பட்ட கருத்துகளை சமூக வளைதளங்கள் மூலம் அறிந்தோம் இது குறித்து நாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம்.இதற்கு முன்னர் தொண்டர் ஆசிரியர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட நியமன்த்தின் போது எதுவித வயதெல்லைகளும் இடப்படவில்லை. அவர்கள் கற்றல் அனுபவத்தினைப் பெற்றார்கள் என்ற ரீதியிலேயே அவர்களுக்கு அந்த நியமனம் வழங்கப்பட்டது.

அதே போன்று நாங்கள் கடந்த பதினைந்து மாதங்களாக கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இதனைக் கவனத்திற் கொண்டு எமது நிரந்தர நியமனத்தினைத் தந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.