இலங்கையில் 4 பேருக்கு உறுதியான ஒமிக்ரான் தொற்று….!

ஒமிக்ரான் பிறழ்வு மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் முன்னதாக ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொற்றுக்குளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

அதோடு ” எதிர்பார்த்தபடி ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகையால், உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் இன்றைய நிலவரப்படி, தங்கள் ஆய்வகத்திலிருந்து நால்வருக்கு ஒமிக்ரான் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் டுவீட் செய்துள்ளார்.

இதேவேளை முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒமிக்ரான் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்திருந்தது. 77 நாடுகளில் பெரிதும் மாற்றமடைந்த மாறுபாட்டின் வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொற்று, இன்னும் பலரிடம் இருக்கலாமென உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், எச்சரித்திருந்தார். மேலும் , மாறுபாட்டைச் சமாளிக்க போதுமான அளவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனவும் அவர் கவலை வெளியிட்டிருந்தமை குறிபிடத்தக்கது.