தமிழர்களுக்கு சார்பாக நடந்துக்கொள்ளும் சுவிஸ் சிங்களவர்களுக்கு வீசா மறுப்பு!

சுவிட்சர்லாந்திற்கு செல்ல விசா பெற விரும்பும் சிங்களவர்களுக்கு, போலீஸ் பதிவுகள் உட்பட்ட அனைத்து விடயங்களும் சரிசெய்யப்பட்டாலும் வீசா மறுக்கப்படுவதாக கொழும்பின் செய்தித்தாள் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்களவர்களில் பெரும்பாலானோருக்கு உரிய பதிவுகள் இருந்தபோதிலும், அவர்களுக்கு வீசா மறுக்கப்படுகிறது.

இருப்பினும், விண்ணப்பதாரர் தமிழராக இருந்தால், அவர், குடியேற்ற விதிகளை அப்பட்டமாக மீறினாலும் சுவிட்சர்லாந்திற்கான விசா கிடைத்து வருவதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது..

2019 இல், ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவின் வெற்றி மற்றும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், தூதரகத்தின் பணியாளர்-( Gania Banister Francis) கானியா பானிஸ்டர் பிரான்சிஸ், தாம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோது, சுவிஸ் தூதரகம் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரு பகிரங்க முயற்சியை மேற்கொண்டது.

தமிழரான பானிஸ்டர், இலங்கை காவல்துறையினரால் கொழும்பில் உள்ள கறுவாத்தோட்டத்தில் வைத்து கடத்திச்செல்லப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், அரசியல் புகலிட விடயங்கள் தொடர்பான முக்கியமான தகவல்களைக் காவல் துறை தம்மிடம் கேட்டதாகவும் முறையிட்டிருந்தார்.

உண்மைகளை அறியாமல், சுவிஸ் தூதரகம் அவரையும் அவரது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்திற்கு அரசியல் தஞ்சம் அளித்து அனுப்ப முடிவு செய்தது.

எனினும் இலங்கை பொலிஸார், இந்த கடத்தல் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கண்டறிந்ததுடன், இலங்கை காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் கதையை உருவாக்கி பொருளாதார காரணங்களுக்காக சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் அடைய முயற்சித்ததாக கண்டறிந்தனர் என்று ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம், இதேபோன்ற மற்றொரு சம்பவம் இலங்கைத் தமிழ் தம்பதியருக்கு எதிராக இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளதாக கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஒரு தமிழர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தமது இரண்டு குழந்தைகளுடன் படகில் சட்டவிரோதமாக சென்று கடந்து டெல்லி சென்று இந்தியாவில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் விசா விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.

தாங்கள் ஒரு தமிழ் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், இலங்கையில் உள்ள மற்றொரு தமிழ் கட்சியின் செயல்பாட்டாளர்கள், தங்களை அச்சுறுத்தியதாகவும் அவர்கள் முறையிட்டனர். இதன்போது சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டிய அவர்களின் குற்றச் செயலைக் கருத்தில் கொள்ளாமல் அல்லது விண்ணப்பதாரர்களின் கூற்றுகள் உண்மையா என்பதைச் சரிபார்க்காமல், இந்தியாவில் உள்ள சுவிஸ் தூதரகம் அவர்களுக்கு விசா வழங்கியது.

எனினும், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரசபையின் புறப்பாடு முத்திரையோ அல்லது இந்திய குடிவரவு அதிகாரசபையின் வருகை முத்திரையோ இல்லாத கடவுச்சீட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எவ்வாறு விசா வழங்கப்பட்டது என்பது தொடர்பில் இந்திய குடிவரவு அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.

எனவே அவர்களை இந்தியாவை விட்டு சுவிட்சர்லாந்திற்கு செல்ல தேவையான ‘வெளியேறும் அனுமதியை மறுத்ததுடன் அவரகளை கைதுசெய்து வழக்கையும் தாக்கல் செய்தனர்.

இதன்போது குறித்த இலங்கையர்கள் இருவரும், தங்களை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையிலும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை ஜனவரி 7ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை தம்பதிகளையும் அவர்களது குழந்தைகளையும் நாடு கடத்த வேண்டாம் என்று இந்திய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 டிசம்பரில் இலங்கை நீதிமன்றத்திலிருந்து கானியா பானிஸ்டர் பிரான்சிஸ் தலைமறைவாக இருந்தபோது கொழும்பில் உள்ள சுவிஸ் அதிகாரிகள்,அவருக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்கினர்.

பின்னர் அவருடன் நீதிமன்றங்களுக்கும் சென்றனர்.

எனினும் புதுதில்லியில் உள்ள சுவிஸ் தூதரக அதிகாரிகளால், இந்திய அதிகாரிகளுடன் இதுபோன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியவில்லை. என்று கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இது இந்தியாவின் கடும் வெளியுறவுக்கொள்கையை காட்டுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.