பேருந்து கட்டணம் உயர்வு! வெளியானது மற்றுமொரு அறிவிப்பு….!

எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை எந்தவொரு காரணத்தினாலும் மீண்டும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜுன் மாதம் வரை பஸ் கட்டணத்தை அதிகரிக்காதிருப்பதற்கு, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் தம்முடன் இணக்கத்தை எட்டியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எரிபொருள் விலை, பஸ்களின் உதிரிபாகங்களின் விலைகள் ஆகியன எந்தளவில் அதிகரித்தாலும், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த பேருந்து கட்டண அதிகரிப்பை தற்போது பெற்றுக்கொடுப்போம். எனினும், எரிபொருள் விலைகள், உதிரிபாகங்களின் விலைகள் எந்தளவிற்கு அதிகரித்தாலும், மீண்டுமொரு முறை பேருந்து கட்டணத்தை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை அதிகரிக்க மாட்டோம் என பேருந்து உரிமையாளர்களுடன் கடந்த முறை கலந்துரையாடல்களை நடத்திய போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் முதலாம் திகதியே, பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்து ஆராயும்.

இந்த முறை சிறியளவிலான பேருந்து கட்டண அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துள்ளோம். கடந்த முறை எரிபொருள் விலை அதிகரித்தது.

கடந்த முறை விடயங்களை நாம் தெளிவூட்டிய வேளையில், பேருந்து கட்டணத்தை அதிகரிக்காதிருப்பதற்கு அவர்கள் இணங்கியிருந்தார்கள்.

இந்த முறை மீண்டும் அதிகரித்தது. அதனாலேயே ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 3 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.

எனினும், எந்தவொரு பொருட்களும் எவ்வாறான விதத்திலும் விலை அதிகரிக்குமாக இருந்தாலும், மீண்டும் ஜுன் மாதம் முதலாம் திகதி வரை பேருந்து கட்டணத்தை அதிகரிக்காதிருப்பதற்கு அவர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது என திலும் அமுனுகம தெரிவித்தார்.