எரிவாயு கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்….!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், தமது அன்றாடத் தேவைக்காகவும், தொழிலுக்காகவும் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள மிக நீண்ட வரிசையில் பொதுமக்கள் தினம் தினம் காத்து நிற்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஒரு நாளைக்கு நூறு எரிவாயு கொள்கலன்கள் என்ற அடிப்படையில் டோக்கன் கொடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

எனினும், அதிகாலை ஐந்து மணி முதல் வரிசையில் காத்திருந்தும் கூட ஒரு சிலரால் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

அத்துடன், ஒரு சிலர் தமது பிரதேசங்களைத் தவிர்த்து மிக நீண்ட தூரம் பயணம் செய்தும் அதிக செலவு செய்தும் எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இதேவேளை, ஒரு சில உணவகங்கள் எரிவாயு கொள்கலன்கள் இல்லாததன் காரணத்தினால் மூடப்பட்டுள்ளன.

தலைநகர் கொழும்பு – கோட்டை பகுதியில் மாத்திரம் எரிவாயு கொள்கலன்கள் இல்லாமையால் சிறு வியாபார நிலையங்கள் உள்ளிட்ட 30000 இற்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்றைய எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் நோயாளர் காவு வண்டியில் குறித்த நபர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.