பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு அபராதம்?


கோவிட்டுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது. சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இவ்வாறு அபராதம் விதிப்பது குறித்த சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் இந்த நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை முடக்காது சமூக பொருளாதார செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பூஸ்டர் டோஸ் ஏற்றிக் கொள்வது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூஸ்டர் டோஸை கட்டாயமாக்குவது தொடர்பில் பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. எவ்வளவு தொகை அபராதம் விதிப்பது, யார் அதனை அறவீடு செய்வது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.