வவுனியாவில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்…!வவுனியா பல்கலைக் கழகத்தை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ விஜயம் செய்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி சென்றிருந்த நிலையில் கறுப்பு கொடிகளுடன் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பல்கலைக்கழகம் முன்பாக சென்று போராட்டத்தில் ஈடுபட முனைந்தனர்.

இதன்போது பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பம்பைமடு சோதனை சாவடிப் பகுதியில் வைத்து பல்கலைக்கழப் பகுதிக்கு செல்ல முடியாதவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸ் தடுப்பை உடைத்து செல்ல முற்பட்டமையால் அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது ‘ காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும், போர்க்குற்றவாளியை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, சர்வதேச விசாரணையே தேவை’ என அவர்கள் கோசம் எழுப்பயதுடன், பொலிசாருடன் கடும் தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

இதன்போது, எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரயை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள்.

நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று பொலிசாரை பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர். கொலைக் குற்றவாளியே நாட்டின் ஐனாதிபதியாக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம்.

எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்கவேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்த போதும் அதனை பொருட்படுத்தாத பொலிசார் அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் வருகை தந்து, குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை. எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன், கொலைக்குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர்.

இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக நின்றனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி அழுது கோசமிட்டனர். அதில் ஒருவர் மயங்கி விழுந்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தனர்.

Previous articleகாதலர் தினத்திற்கு அரசாங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு….!
Next articleதிடீரென மாயமான வவுனியா – மன்னார் வீதியில் இருந்த குழிகள்!