மாந்திரீக நம்பிக்கையால் காவு கொள்ளப்பட்ட சிறுவன்! பரிசோதனையில் வெளிவந்த தகவல்….!

படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனுக்கு கோவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து துர்மணம் வீசுவதாக பிரதேசவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்போது, அவ்வீட்டில் உள்ள அறையொன்றின் கட்டிலில் 10 வயது சிறுவனின் சடலம் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளை சிறுவனை பெற்றோர் அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தி வந்துள்ள நிலையிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாகவும் அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சிறுவனின் தந்தை மற்றும் பாட்டியை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், உயிரிழந்த சிறுவனின் தாயை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.