எலன் மஸ்க் நிறுவன ஆராய்ச்சியால் பரிதாபமாக பறிபோன உயிர்கள்!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் நிறுவன ஆராய்ச்சியால் 15 குரங்கள் இறந்ததாக வெளியான செய்தியை எலன் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 2017 இல் நியூரோலிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார். இதற்காக நியூரோலிங்க் நிறுவனம் குரங்குகளின் மண்டை ஓடுக்குள் சிப் வைத்து சோதனைக்கு உட்படுத்தியது.

நியூரோலிங்கின் இந்தச் சோதனைகள் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை நடந்து வந்தது. அதற்காக சுமார் 23 குரங்குகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டுகூட மண்டை ஓட்டுக்குள் சிப் பொறுத்தப்பட்ட குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடும் புகைப்படத்தை நியூரோலிங்க் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், குரங்குகள் மீதான இந்தப் பரிசோதனைக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்ததுடன், இந்தச் சோதனையால் குரங்குகளின் உடல் நிலை பாதிப்படலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

குரங்கின் மண்டை ஓட்டுக்குள் வயர்லெஸ் சிப் பொருத்தியதில் நியூரோலிங்க் நிறுவனத்தால் 15 குரங்குகள் கொல்லப்பட்டதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.முதலில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்த நியூரோலிங் நிறுவனம், தற்போது குரங்குகள் இறப்பை ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் குரங்குகளை சித்ரவதை செய்யவில்லை என்றும், உடல் நலக்குறைவால் அவை இறந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஆண்டின் இறுதியில் மனித மண்டை ஓட்டுக்குள் சிப்பை பொறுத்த நியூரோலிங்க் நிறுவனம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.