கோட்டாபயவுக்கும் மஹிந்தவுக்கு எச்சரிக்கை விடுத்த சந்திரிகா

”வீதிகளில் இறங்கிப் போராடும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஒரே தடவையில் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபயவும் மகிந்தவும் பதவி விலக வேண்டும் எனக் கோரியே ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் அலரி மாளிகைக்கு முன்பாகவும் இரவு பகலாக மக்கள் போராடி வருகின்றனர்.

மக்கள் ஆணையின் பிரகாரம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும் பிரதமரும் மக்களின் இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமர் மகிந்த ராஜபக்சவைப் பதவி விலகுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கோரி வருகின்றனர்.

ஒருவரை மட்டும் பதவி விலகக் கோரும் இந்தச் சுயலாப அரசியல் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல. காலம் தாழ்த்தாது கெளரவமாக இருவரும் பதவி விலகி புதிய ஆட்சிக்கு வழிவிட வேண்டும். பிரதமர் மகிந்தவை மட்டும் பதவி விலக்கி ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இடைக்கால அரசு அமைந்தால் அதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் போராட்டங்கள்தான் மேலும் வீரியமடையும்.

எனவே, மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லையேல் பெரும் விளைவுகளை இருவரும் சந்திக்க வேண்டிவரும்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இரட்டை வேடத்தில் இருப்பதால் நாடாளுமனத்தில் பிரேரணைகள் மூலம் அரசையும் ராஜபக்சக்களையும் கவிழ்ப்பது எந்தளவுக்குச் சாத்தியம் என்று இப்போது சொல்ல முடியாது.

எனினும், பிரேரணைகள் வாக்கெடுப்புக்கு வந்தால் ஆளும், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மை முகங்களை அறிந்துகொள்ள முடியும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்