மஹிந்தவிற்கு எதிராக களமிறங்கிய 1000 தேரர்கள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் மகாசங்கத்தின் அணி நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளதுடன், இதற்காக ஆயிரம் பேர் இன்று கொழும்புக்கு வரவுள்ளனர்.

மகா சங்கத்தினருக்கும், சர்வகட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. இதன்போது சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு நகர்வாகவே இது கருதப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர்,

புதிய பிரதமரின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசையே மகாநாயக்க தேரர்கள் எதிர்பார்த்தனர். தேசிய சபை ஊடாக நடவடிக்கை இடம்பெற வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். மக்களும் இதனையே கோருகின்றனர்.

இந்நிலையில் மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் இன்று கொழும்புக்கு வருகைதரவுள்ள நிலையில் இதன்போது காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும். மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காவிட்டால், மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை “மகாசங்கத்தினரின் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமரின் கீழ்தான் இடைக்கால அரசு என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெறும். இதன்போது கட்சித் தலைவர்களுக்கு மகாசங்கத்தினர் ஆலோசனை வழங்குவார்கள் என்றும் ஓமல்பே சோபித தேரர் அறிவித்தார்.

மேலும் இம்மாநாட்டுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பது குறித்து அக்கட்சி முடிவு எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Previous articleஇலங்கையில் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம் : அதிர்ச்சியில் மக்கள்
Next articleபிரபல நகைச்சுவை நடிகையான ரங்கம்மா பாட்டி காலமானார்.!