தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கூறவேண்டுமே தவிர தற்போது இடம்பெற்று வரும்
ஆர்ப்பாட்டத்தில் தலையிடகூடாது – தர்மலிங்கம் சுரேஷ்

தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளை கூறவேண்டுமே தவிர தமிழ் இளைஞர்கள் வீதிக்கு இறங்கிவரக்கூடாது, அந்த இடத்துக்கு வந்து தமிழர்களை அழைக்கின்றார்கள் என்று சொன்னால் இவர்களுக்கு என்று ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் நேற்று(29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்கள மக்கள் காலிமுகத்திடலிலே அவர்களின் இனத்தை காப்பாற்றுவதற்காக போராடவில்லை.தங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக போராடுகின்றார்கள்.

இந்த காலிமுகத்திடலில் 1956 ம் ஆண்டு தமிழ் தலைவர்கள் தனிச்சிங்கள சட்டத்துக்கு எதிராக போராடினார்கள். அப்போது அன்று காட்டுமிராண்டி தனமாக தந்தை செல்வாவினை தாக்கினார்கள். அவ்வாறே அமிர்தலிங்கத்தின் தலையை சிங்களவர்கள் அடித்து உடைத்தனர். அப்படிப்பட்ட மோசமான சம்பவம் நடந்திருக்கின்ற வேளையிலே இன்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ .சுமந்திரன் எங்களுடைய தமிழ் இளைஞர்களையும் வீதிக்கு இறங்கி போராடச் சொல்லுகின்றார் என்றால் அது உண்மையிலே முட்டாள் தனமானது.

கடந்த காலத்தில் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இருக்கின்றது. நீதி துறையில் நம்பகத்தன்மை இருக்கின்றது, என தெரிவித்து உள்ளக விசாரணை என்று எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு எல்லாவற்றையும் நழுவ விட்டு விட்டு இன்று நீதிமன்றம் வருகின்றார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை, சிவராமின் படுகொலையிலே பொறுப்பு கூறவேண்டியதில் இந்த தரப்பும் இருக்கின்றது என்பதை மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கூறிக் கொள்கின்றோம்.

அன்று சர்வதேச விசாரணையை கோரியிருந்தால் இந்த பொறுப்பு கூறல் விடயத்தை அங்கேயே நாங்கள் பார்த்திருக்கலாம்.இன்று எங்களுக்கு நீதி பிறந்திருக்கும் ஆனால் இந்த உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இருக்கின்றது என இவர்கள் கூறிவிட்டு இன்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்கள், மக்களை பிழையாக வழிநடத்துகின்றார்கள். அதேவேளை தமிழ் இளைஞர்களை மேலும் தாக்குதலுக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

எனவே இந்த தவறான அரசியலை மக்கள் நீண்ட காலம் பார்த்து வருகின்றனர். மிக வேகமாக நிராகரிப்பார்கள் முதலில் இன்று வடக்கிலே கூட்டமைப்பின் செல்வாக்கு குறைந்திருக்கின்றது. கிழக்கில் அதைவிட வேகமாக மக்கள் விளங்கி கொள்வார்கள். அப்போது நீங்கள் வீட்டுக்குப் போவது தவிர்க்க முடியாது என்பதினையும் தெரிவித்துக்காள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleயாழில் பத்து வயது சிறுவன் துஸ்பிரயோகம் 32 வயது இளைஞன் கைது
Next articleநாட்டின் பல பகுதிகளில் குவிக்கபட்ட இராணுவ வீரர்கள் – வெளியான காரணம்