இலங்கை அகதிகள் முகாமில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

ஈழத்தமிழ் பெண் ஒருவர் மண்டபம் அகதிகள் முகாம் வாசல் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சொந்த செலவில் புணரமைத்த வீட்டை புதிதாக வந்த இலங்கை தமிழர்களுக்கு கொடுத்துவிட்டு தனது உடமைகளை வெளியில் வீசியதாக கூறி இலங்கை ஈழத்தமிழ் பெண் ஒருவர் அகதிகள் முகாம் வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இச்சம்பவமானது தமிழகத்தில் உள்ள மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இன்று இடம்பெற்றுள்ளது.

மண்டபம் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் 450 குடும்பத்தைச் சேர்ந்த 1419 இலங்கைத் தமிழர்கள் அங்கு வசித்து வருகின்றனர். மேலும் முகாமில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இந்நிலையில்,தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வரக்கூடிய இலங்கை தமிழர்களை தங்க வைப்பதற்காக 147 வீடுகள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே வவுனியாவிலிருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்த ராசிய பேகம் என்பவரின் குடும்பத்தினர் வசித்து வரும் வீடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் பக்கத்தில் உள்ள வீட்டை சொந்த செலவில் புனரமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வீட்டை நேற்று வந்த ஐந்து இலங்கை தமிழர்களுக்கு ஒதுக்கி இவரை குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை அகற்றியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெண் மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாம் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாம் தனி ஆட்சியர் தொடர்ந்து இலங்கை முகாம்களில் வசிக்கும் மக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும் பணம் தராததால் முன்விரோதம் காரணமாக தங்களை அந்த வீட்டை விட்டு காலி செய்து வெளியே அனுப்பி விட்டதாகவும், பல வீடுகள் இன்னும் புனரமைக்கப்பட்டு நல்ல நிலைமையில் உள்ள வீடுகளை ஒதுக்காமல் தங்களது வீட்டை மட்டுமே ஒதுக்கி குழந்தைகளுடன் வெளியே அனுப்பியதாக இலங்கை பெண் குற்றச்சாட்டினார்.

தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மண்டபம் அகதிகள் மறு வாழ்வு முகாமை ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இதே போல் தனி வீடு மற்றும் தனி பதிவு கேட்டு கடந்த திங்கள் கிழமை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து மனு கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் விளக்கு வெளிச்சத்தில் படித்த சிறுமி பரிதாபமாக பலி
Next articleபிரதமர் மகிந்த இராஜினாமா தொடர்பில் வெளியான அறிவிப்பு