இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பொலிஸார்

தஞ்சம்தேடி தமிழகம் சென்ற இலங்கை பெண்ணின் வீட்டிற்குள் இரவில் நுழைந்த பொலிஸ் அதிகாரியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு பைப்பர் படகில் அகதியாக வரும் இலங்கை தமிழர்கள் 80 பேரை பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மார்ச் 22 ஆம் திகதி மர்மப் படகில் வந்த ஒரு இளம்பெண் உட்பட 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். மெரைன் பொலிஸார் விசாரணைக்கு பின், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கணவரை பிரிந்த அப்பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் மண்டபம் மெரைன் பொலிஸ் அதிகாரி அன்பு, கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு மது போதையில் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்அ நிலையில், அப்பெண் மறுத்ததையடுத்து அங்கிருந்து பொலிஸ் அதிகாரி தப்பி சென்றதாக கூறப்படுகின்றது.

இது குறித்து அப்பெண் மற்றும் அப்போது முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவிடம், மெரைன் ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணை அறிக்கை படி மாவட்ட பொலிஸிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட அன்புவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியால் தஞ்சம்தேடி தமிழகம் வந்த இலங்கை தமிழ் பெண்ணிடம் மது போதையில் பொலிஸ் அதிகாரி தவறாக நடக்க முயன்ற சம்பவம் முகாமில் வாழும் இலங்கை தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.