பெற்றோர்கள் கூறியதை மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதையும் மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவன் மீது இடி தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 110 டிகிரிக்கு மேல் வெயில் நிலவியது. அக்கினி நட்சத்திரம் இன்று துவங்கிய நிலையில் காஞ்சிபுரம் நகரின் பல இடங்களிலும் வெள்ளை கேட் பாலுசெட்டி சத்திரம்,

வையாவூர், தாமல், கீழம்பி, கீழ்கதிர்பூர், செவிலிமேடு ,வெங்கடாபுரம் உள்ளிட்ட பல ஊராட்சிகளிலும் பலத்த சூறாவளிக் காற்றுடன் இடி மின்னல் மற்றும் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்பவர்க்கு இரண்டு மகன்கள். இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்த இளைய மகன் நந்தா (ஏழாம் வகுப்பு மாணவன் – வயது 12) உணவு அருந்திக் கொண்டிருந்த போது மழை பெய்ததால் ஏரிகரைக்கு சென்று மாடுகளை ஓட்டி வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றார்.

நந்தாவின் பெற்றோர்கள் செல்ல வேண்டாமென தடுத்ததையும் மீறி வீட்டின் அருகே உள்ள ஏரிக் கரையை ஒட்டியுள்ள வயல் வெளிக்கு மாடுகளை ஓட்டி வர சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் நந்தா திரும்பி வராததால் பெற்றோர்கள் நந்தாவை தேடிக் கொண்டு சென்றனர். வயல்வளி ஓரமாக இடி தாக்கி நந்தா சடலமாக கிடந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

நந்தாவை தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். நந்தாவை பரிசோதித்த மருத்துவர் ‘அவர் ஏற்கனவே இறந்து விட்டார்’ என கூறியதை கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அழுது புலம்பினர்.

பள்ளி மாணவன் நந்தாவின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கு பிணைவரைக்கு அனுப்பப்பட்டது. வயல் வெளிக்கு செல்ல வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதையும் மீறி சென்ற பள்ளி மாணவன் நந்தாவின் நிலை மற்ற யாருக்கும் ஏற்படக்கூடாது என அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்துடன் கூறினர்

Previous articleஇலங்கை வந்தது இந்தியாவின் மற்றுமொரு எரிபொருள் கப்பல்
Next articleஎதிர்பாராத விதமாக 7வது மாடியிலிருந்து கீழே விழுந்த குழந்தை : கதறும் குடும்பம்!!